சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும், தாம்பரம் சானடோரியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே, இடம் தொடர்பாகப் பிரச்சினை இருந்துவந்தது.
இந்நிலையில் அந்த இடத்தை ஒரு நிறுவனத்திடம் விற்பனை செய்ய சதீஷ்குமார் ஒப்பந்தம் செய்துகொண்டு மூன்று கோடியே 23 லட்சம் ரூபாய் பெற்றதாகத் தெரிகிறது. இதையறிந்த பாலமுருகன், அந்த இடத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த கற்களைப் பிடுங்கி எறிந்து அந்த இடத்தை விற்பனை செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், பாலமுருகனை திரு.வி.க. நகர் ஜார்ஜ் காலனியைச் சேர்ந்த முகமது மஜாசுதீன் என்பவருடன் சேர்ந்து புரசைவாக்கம் அண்ணாமலை தெரு சந்திப்பில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலைசெய்தார்.
இதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் துறையினர், சதீஷ்குமார் உள்பட எட்டு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஷ் என்பவர் இறந்துபோனார்.
மற்ற ஏழு பேர் மீதான வழக்கை விசாரித்த சென்னை 6ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த், குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ்குமார், முகமது மஜாசுதீன், சகாயு, கோபிநாத், மணிகண்டன், ஜாகீர் உசேன், அருண்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.