சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், பள்ளியின் பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் விவரமாக கேட்டறிந்தார். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் செல்போன் மூலமாக குழந்தையின் தாயார் ஜெனிஃபரிடம் பேசினார் . விபத்தில் குழந்தை இறந்தது குறித்து ஆறுதல் தெரிவித்த அவர், பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.