சென்னை: 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதன் பின்னர், துரிதமாக வேலை தொடங்கப்பட்டு, கூவம் ஆற்றோரம் 19.5 கிலோமீட்டருக்கு தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த மிகப்பெரிய திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் வகையில், அப்போது ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் பின்னர் 2011இல் ஆட்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டது. ஏனெனில் 19 கிமீ நீளம் கொண்ட இந்த சாலை திட்டத்தில் சுமார் 14 கி.மீ. கூவம் ஆற்றின் வழியே செல்கிறது.
இதற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது என்னவென்றால் பெரும்பாலான தூண்கள் கூவம் ஆற்றின் கரையினில் செல்வதால், மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடையூறு ஏற்படும். இதனால் இந்த திட்டம் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது. ஆனால் இன்றுவரை கட்டப்பட்ட தூண்கள் மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகள் கூற்றுப்படி, "இந்த இரண்டு அடுக்கு பாலத்தில் முதல் அடுக்கில் பேருந்துகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமையவிருக்கிறது. இடையே சில இடங்களில் இறங்கவும், ஏறவும் அணுகு சாலைகளும் அமைக்கப்படும்," என தெரிவித்த அதிகாரிகள் லாரிகள் மற்றும் கண்டைனர்களும் செல்லும் வகையில் இரண்டாம் அடுக்கில் செல்லும் என தெரிவித்தனர்.