சென்னை: சமூக வலைதளங்களில் இணையதள தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக வரக்கூடிய தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இணையதளங்களில் கல்லூரி பருவத் தேர்வுகளை நடத்த வேண்டுமென சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகளுடன் நேற்று (நவம்பர் 19) நடத்திய கலந்தாய்வில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின்னர் நேரடியாகப் பருவத் தேர்வுகள் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இணையதள தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் வருகிற திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக கல்லூரி மாணவர்கள் அனைவரும் வருகைதர வேண்டுமெனவும் பொய்யான செய்தி ஒன்று உலாவருகிறது.