சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி குற்றவாளிகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி நபர்கள் மீதான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தணிக்கையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி நபர்கள் என 417 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு அதில், 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
நடப்பாண்டில் இதுவரையில் 105 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி நபர்கள் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், பிணையில் வர முடியாத தண்டனையில் சிறையில் உள்ளனர். 33 குற்றவாளிகள் செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பழைய குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடாமல் தடுக்கவும் காவல் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... ஒருவர் கைது...