சென்னை: கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐ.ஐ.டி., மாணவி ஒருவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. உதவி கேட்டு மாணவி கூச்சலிட்டும் யாரும் வராததால், மாணவி மர்ம நபருடன் சண்டையிட்டு காப்பாற்றி கொண்டதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த மாணவி புகார் ஏதும் அளிக்கவில்லை. இந்நிலையில் மாணவியின் நண்பர் அளித்த புகார் அடிப்படையில் முதற்கட்டமாக, ஐ.ஐ.டியில் வேலை பார்க்கும் வட மாநில நபர்களில் யாராவது இருக்கலாம் என, 300 பேரின் புகைப்படங்களை காண்பித்தனர். சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அடையாளம் காண்பிக்க முடியவில்லை. அன்று ஐ.ஐ.டியில் 35 கட்டுமான ஊழியர்களையும் அழைத்து நிர்வாகம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஐ.ஐ.டி., நிர்வாகத்தினர் வளாகத்தில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உதவி தேவைப்படும் நேரத்தில், ஊழியருடன் பேருந்தை அழைக்கும் வசதியும் உள்ளது.
இரவு நேரங்களில், ஐ.ஐ.டி., வளாகத்தில் தனியாக பயணிக்கும் மாணவியர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். துரிதமான உதவிக்கு பாதுகாப்பு பிரிவை உடனே அணுகுங்கள். மொபைல் போன் செயலி வாயிலாக பாதுகாப்பு அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளனர்.