சென்னை:சென்னை மகாபலிபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 30ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. சென்னையில் முதன்முதலாக உலக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால் புதிய முறையில் அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமான நேப்பியர் பாலத்தில் செஸ் போர்டு வடிவில் பெயிண்ட் அடித்தது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த வகையில் தீக்குச்சி மற்றும் பல்குத்தும் குச்சியை பயன்படுத்தி காவல் ஆய்வாளர் ஒருவர், 2.5x2.5 செ.மீ அளவில் செஸ் போர்டு வடிவமைத்து அசத்தியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் காவல் ஆய்வாளரான வீராசாமி நுண்கலை சிற்பங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது இளம் வயது முதலே நுண்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பென்சில் லெட், சாக்பீஸ், தீக்குச்சி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி புத்தர், திருவள்ளுவர், பென்னிகுவிக், அப்துல் கலாம் போன்றோரின் நுண்கலை சிற்பங்களை செய்துள்ளார்.
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் வெறும் கையால் பிளேடு மற்றும் சர்ஜிக்கல் கத்தியை பயன்படுத்தி பிளாஸ்டிக் மூலம் 8x8 மி.மீ அளவிலான செஸ் போர்டு மற்றும் 0.8 மி.மீ செஸ் காயின்களை உருவாக்கினார். இது உலகிலேயே வெறும் கையால் செய்யப்பட்ட நுண்ணிய செஸ் போர்டு என Assist World Record Association ஆய்வாளர் வீராசாமிக்கு சான்றிதழை வழங்கியது.
அதுமட்டுமல்லாமல் பணிக்குச் சேர்ந்த பின்னும் பல்வேறு நுண்கலைச் சிற்பங்களை செய்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வந்த இவருக்கு, கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அரசு கலை வளர்மணி என்ற விருதை வழங்கி கௌரவித்தது.