சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7ஆம்தேதி சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சார்பில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் அளித்தார். அது குறித்து பேசிய அவர், "சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாக பேசியதாக சமூக வலைதளத்தில் பொய்யாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த, தவறான நோக்கத்தோடு அரசியல் எதிரிகள் இது போன்று பரப்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இது முற்றிலும் தவறான செய்தி. அமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் இதை செய்கின்றனர். அமைச்சர் எந்த ஒரு இடத்திலும் அப்படி ஒரு கருத்தை தெரிவிக்கவில்லை. எனவே, அந்தச் சமூக வலைதள பக்கத்தை தடை செய்யவும், பொய் பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அளித்திருக்கிறேன்” எனக் கூறினார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாரதர் மீடியா என்ற இனையதளத்தின் மூலமாக இந்த பொய்யான தகவல் பரப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நாரதர் மீடியா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இபிகோ 153 கலகம் செய்ய தூண்டி விடுதல், 153ஏ- சாதி, மத, இன மொழி தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டிவிடுதல் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.