சென்னை பெருநகரில் உள்ள மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரிக்கும் குற்றங்கள் போன்ற காரணங்களால் சென்னை காவல்துறையில் இருந்து தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள காவல் மாவட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் முதலமைச்சரின் தொகுதியை உள்ளடக்கிய பகுதி கொளத்தூர் காவல் மாவட்டமாக கடந்த வாரம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் இயங்கும் காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராஜமங்கலம், கொளத்தூர், பெரவள்ளூர், வில்லிவாக்கம், ஐசிஎப், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் புழல், மாதவரம் ஏழு காவல் நிலையங்கள் செயல்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் மாதவரம் காவல் மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டதால், மீதம் இருந்த மாதவரம், புழல் காவல் நிலையங்கள் கொளத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மாதவரம் காவல் மாவட்டம் கலைக்கப்பட்டு, புதிதாக கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்படுகிறது.