சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், நில மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, சைபர் மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில், சிறப்பாகப் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்தவர்களை ஊக்குவிக்கும்விதமாகப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சிறப்பாகப் பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வெகுமதி வழங்கினார். மேலும் சமூக சேவை ஆற்றிவரும் சமூக ஆர்வலர் முகமது அலி ஜின்னா என்பவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பின்னர் செய்தியாளரிடம் பேசிய காவல் ஆணையர், “கடந்த ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மூலம் பல்வேறு மோசடி வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. 'சிம் ஸ்வாப்' முறையில் நடைபெற்ற மோசடிகளில் குற்றவாளிகளை முதல் முறையாக சென்னை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான வழக்குகள் தொடர்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் பொருளாகவும், பணமாகவும் 184.4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு அவற்றுள் 122.63 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆழ்வார்பேட்டை தனியார் கண் மருத்துவமனையில் 'சிம் ஸ்வாப்' முறையில் 24 லட்சம் ரூபாய் திருடிய குற்றவாளிகளில் நான்கு பேரை மேற்கு வங்கத்திற்குச் சென்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேடிவருகின்றோம்.
அதுமட்டுமல்லாமல் இவ்வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட சிம் சர்வீஸ் ஆபரேட்டர் நிறுவன அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. மாணவர்களின் மோதல் சம்பவங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படவுள்ளது. பொது இடங்களில் பிரச்சினையில் ஈடுபட்டு மோதிக்கொள்ளும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாயும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்க உத்தரவு