சென்னை: வியாசர்பாடி அன்னை சத்யா நகர், சத்தியமூர்த்தி நகர், புளியந்தோப்பு கே.பி. பார்க், அசோக் நகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் அரசு குடியிருப்பு, குடிசை, கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியாக நின்று தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கினர்.
இதில் கலந்துகொண்ட அன்னை சத்யா நகர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த எலஸ் பான் சவுந்தரி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
எங்கள் இடத்தை எங்களுக்கே கொடுக்க வேண்டும்
“நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்துவருகிறோம். இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே நீங்கள் காலி செய்துகொடுத்தால் நாங்கள் இங்கு குடியிருப்பு கட்டித் தருகிறோம் எனக் கூறி எங்களை காலி செய்ய கூறுகின்றனர்.
ஆனால் எங்களுக்கு இங்கு அடிப்படை வசதிகள் அனைத்துமே உள்ளது. இங்கு நாங்கள் நிலவரி, கழிவுநீர் வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்திவருகிறோம். மேலும் தெருவிளக்கு, சிமென்ட் சாலை, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் வசதியும் உள்ளது.
மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நாங்கள் கேட்பதெல்லாம், நாங்கள் பல ஆண்டுகளாக வசிக்கும் இந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்பதுதான். எங்கள் இடத்தை எங்களுக்கே கொடுக்குமாறு குடியிருப்பு அலுவலர்களிடமும், முதலமைச்சரிடமும் மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்
புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வசித்து வரும் பாஸ்கர் என்பவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
”தற்போது கட்டி முடிக்கப்பட்ட கேபி பார்க் குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், இங்கு லிப்ட் வசதியும், குடிநீர் வசதியும் முறையாக இல்லை. எங்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம்.
மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம் மேலும், கேபி பார்க் கட்டடம் தரம் குறித்து ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும். ஏனெனில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் உயிர் பயம் இல்லாமல் இங்கு வாழ முடியும்” எனத் தெரிவித்தார்.
பட்டா வழங்க வேண்டும்
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கௌரி என்ற பெண் கூறுகையில், “நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து எங்களால் வேறு இடத்திற்கு மாறிச் செல்ல முடியாது. ஏற்கனவே மாறிச் சென்றவர்களும் தற்போது மீண்டும் இங்கேதான் வந்துகொண்டிருக்கின்றனர்.
நீங்கள் வேறு இடத்திற்கு எங்களை மாற்றுவதற்குப் பதிலாக நாங்கள் இருக்கும் இடத்திலேயே எங்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருவதாகக் கூறினீர்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம். நாங்கள் இருக்கும் இடத்திலேயே எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து எங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம் இழப்பீடு வழங்க வேண்டும்
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி பேசுகையில், “வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்ப் பகுதியில் 13 மாடி கட்டடம் கட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் கட்டடம் கட்டி முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை.
இங்கிருந்து வெளியேறிய நாங்கள் அனைவரும் தினக்கூலி ஊழியர்கள். வீடு கட்டி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீட்டிற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை. எனவே தமிழ்நாடு அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மக்கள் மனிதச் சங்கிலி போராட்டம் மேலும், தற்போது கரோனா பரவல் இருப்பதால் எங்களின் வேலை பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு வேலையின்மை, எங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, வாடகை கொடுக்காமல் வீட்டை காலிசெய்வது போன்ற சூழ்நிலைகளையும் சந்தித்துவருகிறோம்.
நாங்கள் இருந்த இடம் முன்னர் எப்படி இருந்ததோ அதேபோல அனைத்து வசதிகளுடன் எங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என நாங்கள் அரசிடம் கோரிக்கைவைக்கிறோம். நாங்கள் இங்கு 40 ஆண்டுகளாக வாடகை கொடுத்துவந்துள்ளோம். எனவே எங்களுக்கு இந்த இடத்தை சொந்தமாக்கி பட்டா வழங்கி எங்களுடைய நில உரிமையை எங்களுக்கே வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அசோக் நகர் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனசிங் என்பவர் அளித்த பேட்டியில், “நாங்கள் இருக்கும் பகுதியில் சுயநிதித் திட்டம் மூலம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் எங்களிடம் தற்போது பணம் இல்லை, நாங்கள் தவணை முறையில் செலுத்துகிறோம் எனப் பலமுறை கூறியுள்ளோம்.
ஆனால் அலுவலர்கள், ’நீங்கள் தவணைத் தொகையை எப்போது செலுத்துகிறீர்களோ அப்போதுதான் வீடு வழங்குவோம்’ எனக் கூறிவருகிறார்கள். எங்களுக்கு வீடுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது
திருவல்லிக்கேணியில் கால்வாயை ஒட்டி உள்ள பகுதியைச் சேர்ந்த சச்சு என்ற பெண் பேசுகையில், “நாங்கள் 40 முதல் 45 ஆண்டுகள் இந்தப் பகுதியில் வசிக்கிறோம். இங்கிருக்கும் எங்களை பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளுக்கு மாற்றுகிறீர்கள். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால் எங்களால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேலும், குழந்தைகளின் கல்வித் தேவைகளும் பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்படும். நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் எங்களுக்கு வீடுகள் வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
மழை வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்
மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசன்னா என்ற பெண், “நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வாழ்வதால் எங்களுடைய வாழ்வாதாரம் இங்குதான் உள்ளது. எங்களுடைய குழந்தைகளின் பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு என அனைத்தும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.
இதைத் தவிர்த்து எங்களை இங்கிருந்து பெரும்பாக்கம் செம்மஞ்சேரி பகுதிகளுக்குச் செல்ல சொல்கிறார்கள். ஏற்கனவே கடந்த மழை வெள்ளத்தில் பெரும்பாக்கத்தில் இருந்த குடியிருப்பு மூன்று அடி வரை நீரில் மூழ்கியது” எனக் கூறினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த நகர்ப்புற நில உரிமை குடியிருப்பு கூட்டமைப்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த மோகன் என்பவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
சட்ட விரோதமாக வெளியேற்றம்
”குடியிருப்பு நகர்ப்புறச் சேரியினரின் நில உரிமை மீட்பை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். ஆற்றின் ஓரம், ஏரி ஓரம் என கூவம் ஆற்றுக் கரையோரம் இருப்பவர்களைச் சட்டவிரோதமாக வெளியேற்றுவதைக் கண்டித்தும், அவ்வாறு வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு நகரத்திலே வேறு பகுதியில் இடம் வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தைச் செய்துவருகிறோம்.
தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியம் சார்பில் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் குடியிருப்பில் வசிக்கும் மக்களே குடியிருப்பின் பராமரிப்புச் சங்கங்கள் அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்
இவ்வாறு செய்வதன் மூலம் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து விழுந்ததைப் போல பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் இடிந்து விழும் சூழல் ஏற்படும்.
இந்தத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், குடியிருப்புகள் விவகாரத்தில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம்.
2012ஆம் ஆண்டு திமுக சொந்தக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதில் நகர்ப்புற மக்களை வலுக்கட்டாயமாக பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் குடியமர்த்தியது தவறு என உணர்ந்து சுயவிமர்சனம் செய்து சொந்த கட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஆனால் தற்போது அதன் போக்கை அரசாங்கம் மாற்றியுள்ளது. இதனால் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியிருப்புவாசிகள் தவிர பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்