சென்னை:குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்களில் 80 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 50 நபர்களுக்கு எஸ் ஜீன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் உள்ளதா என்பது குறித்து ஆய்வு-செய்யப்பட்டுவருகிறது.
மேலும் கரோனா உறுதிசெய்யப்பட்ட 80 மாணவர்களும் எம்.ஐ.டி. விடுதி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
செய்தியாளரைச் சந்தித்த பொன்முடி கூறுகையில், "சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஆயிரத்து 659 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதில் 40 மாணவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 41 பேர் விடுதியில் தங்கவைக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இதில் 39 மாணவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அனைத்து மாணவர்களும் நலமுடன் உள்ளனர். விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நெகட்டிவ் வந்தவுடன் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.