சென்னைக்குத் தேவையான தண்ணீர் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, வீராணம் ஆகிய ஏரிகளிலிருந்தும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களிலிருந்தும் எடுக்கப்படுகிறது.
ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையிலும், தட்டுப்பாடு ஏற்படாதபடி சென்னை குடிநீர் வாரியம் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை தொடர்ந்து வழங்கிவருகிறது. மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் இங்கு தேவைப்படும் நிலையில், நாள்தோறும் 650 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட்டுவந்தது. அது தற்போது 700 எம்.எல்.டி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு தண்ணீர் அதிகரித்து வழங்கப்பட்டாலும், நீர் தேவை அதிகமுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை மூடியிருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலோ அல்லது வணிக நிறுவனங்கள் இயங்க மாநில அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினாலோ, பொதுமக்களுக்குத் தற்போதுள்ளதைவிட அதிகளவு தண்ணீர் தேவை ஏற்படும் நிலை உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளதா என்கிற கேள்வியும் எழுகிறது.