கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கை மீறி சிலர் வாகனங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 30 நாட்களில் மட்டும் சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 27,819 நபர்கள் கைது செய்யப்பட்டு, 27,298 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு, 36,893 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.
ஆனால், இத்தனைக்குப் பிறகும் சில இடங்களில் பொதுமக்கள் வாகனங்களில் சுற்றிவருகின்றனர். இதனால் தற்போது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்து வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
மூடப்பட்டது சென்னை அண்ணா சாலை! முதற்கட்டமாக தலைநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையை காவல்துறையினர் மூடியுள்ளனர். குறிப்பாக ஜெமினி மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சிக்னல் வரையிலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. இனி அச்சாலை அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் திறக்கப்படாது. அத்திவாசிய தேவைகளுக்காக செல்பவர்கள் கூட முழுமையாக தணிக்கை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர்.
அண்ணா சாலையில் இதுவரை வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வந்த 6 சோதனைச் சாவடிகள், இன்றிலிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. அண்ணா சாலையைப் போன்றே, வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதைக் கண்டறிந்து மாநகரின் மற்ற சாலைகளையும் மூட காவல் துறையினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூடப்பட்டது சென்னை அண்ணா சாலை! இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் - முதலமைச்சர் அறிவுறுத்தல்