கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் மருத்துவமனை, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில அத்தியாவசிப் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதாலும், பொதுமக்கள் கூட்டம் இல்லாததாலும் பெரும்பாலான உணவகங்கள் நேற்று (ஏப். 25) மூடப்பட்டன.
சில பெரிய உணவகங்கள், அம்மா உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. அம்மா உணவகங்கள் திறந்திருந்தாலும், அவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. பொதுப் போக்குவரத்து வசதி இல்லததால் உணவுக்காக அலைந்து தேடவேண்டிய சூழல் ஏற்பட்டதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் காலை 7 மணிமுதல் 10 மணி வரையும், மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையும், இரவு 7 முதல் 10 மணி வரையும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஞாயிறு ஊரடங்கால் பணியாளர்கள் சிரமம் ஜாப்பர்கான்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற இளைஞர் கூறியபோது,
‘உணவகங்களில் நேரடியாகச் சென்று பார்சல் வாங்க அனுமதிக்கப்பட்டாலும் பொதுப்போக்குவரத்து இயக்கப்படவில்லை. தனியார் வாகனங்களில் சென்றால் காவல் துறையினர் ஆங்காங்கே நிறுத்தி பல கேள்விகள் கேட்பதாகவும், சில இடங்களில் உணவுக்காக செல்கிறோம் என கூறினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. வேலையில்லாவிட்டாலும் உணவு அத்தியாவசியத் தேவையில்லையா' என அவர் கேள்வி எழுப்புகிறார்.
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜெனிஃபர் கூறியதாவது,
‘இரவில் ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் 275 ரூபாய்க்கு குறையாமல் இருந்தால்தான் ஆர்டரை ஏற்கிறார்கள். மிக சில கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதிலும், உணவுப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளது. 2 தோசை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அசைவ உணவுகளின் விலை அதைவிட அதிகமாக உள்ளது. சாதாரண நடைபாதை கடைகளில் நாள் முழுவதும் சாப்பிட ஆகும் செலவு, இங்கு ஒரு வேளை உணவுக்கு தேவைப்படுகிறது’ என்றார்.
கிண்டியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிவசுப்பிரமணியம் என்பவர் பேசுகையில்,
‘சிறிய கடைகளே இல்லாததால் எங்களைப் போன்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் பல இடங்களில் டெலிவரி செய்வதற்கு ஆள் இல்லை. 8 மணிக்கு ஆர்டர் செய்த உணவை கடைசி நேரத்தில் கேன்சல் செய்ததால் சாப்பிடாமல் இரவு உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றார்.