சென்னை: தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் காவல்துறையினர் விரிவான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்ய உள்ளனர்.
சென்னை முழுவதும் 20 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 320 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த உள்ளனர். இணைப்பு சாலைகள், சிறிய சாலைகள் மூடப்பட உள்ளன. மேம்பாலங்கள் மூடப்படுகிறன.
மக்கள் குடியிருப்புகளுக்கு சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்த சமயத்தில் விற்பனையின் போது பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, ரோந்து காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த, சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. சந்தைப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி யாரும் வெளியே வரக் கூடாது. அத்துமீறி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். வாகனங்கள் உடனே திரும்பி கொடுக்கப்படமாட்டாது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் படிப்படியாக உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.