தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் குத்தகைக்கு வீடு விடுவதில் மோசடி: மூவர் கைது! - மூவர் கைது

சென்னை: குத்தகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பலை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது
மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது

By

Published : Aug 28, 2020, 11:49 AM IST

சென்னையில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்யும் கும்பல் பற்றி, சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார்கள் குவிந்தன. கரோனா காலத்தில் இதுபோன்று நூதன மோசடி செய்யும் கும்பல் குறித்து நூற்றுக்கணக்கான பேர் காணொலி அழைப்பு (வீடியோகால்) மூலம் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார்தாரர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறையினர் மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அதில் சன் சைன் ப்ராப்பர்ட்டி டெவலப்பர் என்ற பெயரில் கிழக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்படுவதாகவும், ஓஎல்எக்ஸ், 99 ஏக்கர்ஸ்.காம், நோ ப்ரோக்கர் செயலி போன்ற ரியல் எஸ்டேட் செயலிகள், சமூக வலைதளங்கள் மூலமாக வீடு குத்தகைக்கு இருப்பதாக புகைப்படத்துடன் விளம்பரம் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் என நம்பி, வீட்டை நேரில் சென்றுச் பார்த்து சட்டப்படியான ஒப்பந்தங்களும் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். வீட்டின் வசதியைப் பொறுத்து நான்கு லட்சம் முதல் 12 லட்சம் வரை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு பணத்தைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் குடியேறி ஓரிரு மாதங்களுக்குப் பிறகு உண்மையான வீட்டு உரிமையாளரை சந்திக்கும்போது தான் ஏமாந்தது தெரியவந்துள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

புகார்தாரர்கள் கொடுத்த தகவலை வைத்து காவல் துறையினர் விசாரணை தொடங்கியதிலிருந்து தலைமறைவாக இருந்த சன் சைன் ப்ராப்பர்ட்டி ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாகிகள் பிரகாஷ், காயத்ரி, விக்னேஷ் ஆகியோர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு பல நாள்களாகத் தலைமறைவாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய காவல் துறையினர், தொடர் தேடுதலின் அடிப்படையில் மோசடி கும்பலைக் கூண்டோடு கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட பிரகாஷ், காயத்ரி, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் மோசடி அரங்கேற்றியது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதில் சேலையூர், நன்மங்கலம், தாம்பரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பம்மல், சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள காலியான வீடுகள் இருக்கிறதா நோட்டம் விடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாடகைக்கு விடப்படும் வீடுகளைக் கண்டுபிடித்து, உரிமையாளரிடம் குடும்ப உறுப்பினர்கள்போல் நாங்கள் மூவரும் நடித்து வாடகை பேசி ஒரு வருட ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர். அதன்பின் வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் குத்தகைக்கு, அதே வீட்டை வாடகைக்கு விடுவதாகக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் ஏமாறுபவர்களிடமிருந்து குத்தகைப் பணம் வந்தவுடன், செல்போன் எண்ணை மாற்றி, மீண்டும் மோசடியில் ஈடுபட்டதையும், இதுவரை சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மோசடி செய்த மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க...மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பாலியல் வன்முறை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details