கோயம்பேடு மொத்த விலை காய்கறிச் சந்தை கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது சில்லறை காய்கறி சந்தை மீண்டும் கோயம்பேட்டில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்து வரும் நாள்களில் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விற்பனை கடைகள் பிளாக் எண் எச் (H) முதல் என் (N) வரை இன்றுமுதல் திறக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 800 கடைகளுக்கு மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ள நிலையில் தற்போது 800 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் கூடுதலான கடைகளுக்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திறக்க அனுமதி அளிக்கப்பட்ட கடைகளிலும் குறைவான அளவு கடைகளே இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.
காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு: கோயம்பேடு சில்லறை சந்தை மீண்டும் திறப்பு கரோனா பாதிப்பு கோயம்பேடு சந்தை மூலம் தமிழ்நாடு முழுவதும் பரவிய நிலையில், காய்கறி, பழ, மலர் சந்தைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதன் காரணமாக தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும் மூன்று சக்கர சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.