தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் மாலில் ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம்: மதுவுடன் போதைப் பொருளை பயன்படுத்தியது அம்பலம்

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மாலில் ஐடி ஊழியர் பிரவீன் உயிரிழந்த சம்பவத்தில், மதுவுடன் போதைப் பொருளை பயன்படுத்தியது அம்பலமானது.

தனியார் மாலில் ஐடி ஊழியர் உயிரிழந்த விவகாரம்
தனியார் மாலில் ஐடி ஊழியர் உயிரிழந்த விவகாரம்

By

Published : May 30, 2022, 6:53 AM IST

சென்னை: கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு அண்ணாநகரில் உள்ள தனியார் மாலில் அனுமதியின்றி டிஜே பார்ட்டி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பார்ட்டியில் கலந்துகொண்ட சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியரான பிரவீன் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மறுநாள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறையாக அனுமதி இன்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக மூன்று பேர், அதேபோல சட்டவிரோதமாக பாரில் லைசென்ஸ் இல்லாமல் மது விற்பனை செய்ததாக 3 பேர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்களை முழுவதுமாக போலீசார் அன்றைய தினம் சோதனையிட்டனர். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அன்றைய தினம் போலீசாருக்கு எதுவும் சிக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து பார்ட்டியில் கலந்துகொண்ட சந்தேகப்படும்படியான நபர்கள் சிலரை கண்காணித்து வந்த போலீசார் சமூக வலைதளம் மூலம் இவர்கள் போதை பொருட்களை கைமாற்றி பயன்படுத்துவதைக் கண்டு பிடித்தனர். இதையடுத்து சென்னையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் கோட்டூர்புரத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர் அப்துல் ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி டாக்கஸ் ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நட்சத்திர விடுதிகள் தனியார் மால்களில் நடைபெறும் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பழக்கம் உள்ள மூவரும் பார்ட்டியில் சந்தித்து பழக்கம் ஏற்பட்டு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்ட மாணவி டாக்கஸ் என்பவருக்கு எந்த வித போதை பழக்கம் இல்லை என்பதும் ஆனால் போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்கிற அடிப்படையில் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை வாங்கி கைமாற்றி விற்றுவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவிக்கு மேற்கத்திய இசையில் ஆர்வம் என்பதால் இசைக்கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு அதிகம் செல்வதையும் அதன்மூலம் கிடைத்த நண்பர்கள் சகவாசத்தால் தடை செய்யப்பட்ட ஹாஷ் மற்றும் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பார்டிகளில் சந்திக்கும் நபர்களை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் குழுக்கள் மூலமாக ஒருங்கிணைத்து அவர்களுக்குள்ளாகவே போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்ததும் விற்பனை செய்து வந்ததும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு சமூகவலைதளத்தை கண்காணித்தபோது தான் இந்த மூன்று பேர் சிக்கினார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 12 ஸ்டாம்ப் வடிவிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருளும் கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் தயாரிக்கும் ஹாஷ் என்கிற போதைப்பொருள் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள் மிகவும் குறைவான அளவு எனவும் இது இவர்கள் சொந்த பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப் படுவதாகவும் இது மொத்த விற்பனை செய்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற போதைப் பொருட்கள் ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் ஏஜெண்டுகள் மற்றும் பெரிய அளவிலான போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் டிஜே பார்ட்டியில் கலந்து கொண்டு மரணம் அடைந்த பிரவீன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மரணமடைந்த பிரவீன் மதுவுடன் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதால் மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தத்தால் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:தப்பியோடிய கைதி, தேனியில் பரபரப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details