சென்னை:ஆயிரம் விளக்கு வாலஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பிரபாகர் (73). இவர் தனியார் நிறுவனத்தில் ரசாயன பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது வீட்டிற்கு முன்பு அழகிற்காக மரத்தால் செய்யப்பட்ட இரண்டடி சிவன் சிலையை பொருத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மரத்தினால் செய்யப்பட்ட இந்த சிவன் சிலை காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் பிரபாகர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதில் வீட்டின் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே வரும் ஒரு நபர் வீட்டிற்கு முன்பு பொருத்திவைத்துள்ள சிலையை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
பழமையான மரத்தால் செய்யப்பட்ட கலை பொருளைத் திருடி விற்க முயற்சி இதனையடுத்து அந்தப் பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாரெல்லாம் செல்போன் பயன்படுத்தினார்கள் என்பதை செல்போன் சிக்னல் (அலைபேசி சமிக்ஞை) மூலம் ஆய்வு செய்தபோது திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முத்து என்பவரது செல்போன் சிக்னல் அடையாளம் காணப்பட்டு அவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முத்து திருடிய சிலையை ராயப்பேட்டை பகுதியில் பழைய மரப்பொருள்களை விற்பனை செய்யும் தமீம் அன்சாரி என்பவரிடம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஒத்துக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சிலையைத் திருடிய முத்து, மரக்கடை நடத்திவரும் தமீம் அன்சாரி ஆகிய இருவரையும் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Maanaadu Movie 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'... இறுதியாக வெளியானது மாநாடு