சென்னை:தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் மத்திய கைலாஷ் அருகே நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்காக கோட்டூர்புரம் சரக உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.
சென்னை ஐஐடியை முற்றுகையிடும் போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரன், "இந்தியாவில் 23 ஐஐடிகள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வரி செலுத்துகின்றனர்.
ஆனால் ஐஐடியில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தவில்லை. இங்கு பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது.
சென்னை ஐஐடி தற்கொலைகள், சாதிய பாகுபாடு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல் கடந்த பத்து ஆண்டுகளாக ஐஐடியில் தொடர்ந்து 55 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் சென்னை ஐஐடியில் எட்டு மாணவர்கள் உயிரிழந்து முதலிடத்தில் உள்ளனர்.
சென்னை ஐஐடி காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அனைத்துச் சமூகத்தினரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர் உருவாக்கினார். ஆனால் பேராசிரியர்கள், மாணவர்கள் பார்ப்பனர்களே அதிக அளவில் உள்ளனர்.
ஐஐடியில் உள்ள சாதி வன்கொடுமையால் உதவிப் பேராசிரியர் விபின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே சாதிய வன்கொடுமை குறித்து விசாரணை செய்யவும், ஐஐடி தற்கொலைகள் குறித்து விசாரிக்கவும் தனியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.