மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக் களமாகி உள்ளன. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அங்கு போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவிவருகிறது. கல்லூரிகளுக்கு காலவரம்பின்றி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐஐடியில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் திடீரென இன்று போராட்டம் நடத்தினர்.