சென்னை:வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றில் இறங்கி கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். கஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற இயக்கம் கையால் கழிவுகளை அகற்றும் வேலையை எந்திரமாக்க பரப்புரை செய்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இயக்கம் சென்னை ஐஐடியுடன் இணைந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கான ரோபோ எந்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான மாணவர் குழு ஓமோசெப் என்ற ரோபோ எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
இந்த கருவி மூலம் செப்டிக் டேங்க் கிளீனர் பகுதியிலுள்ள கெட்டியான கசடுகளை வெட்டியும், கழிவுகளை உறிஞ்சியும் எடுக்க முடியும். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ரோபோ எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நிகழ்ச்சியில், தொழிலாளர்களுக்கு ஐஐடி மாணவர்கள் விளக்கினர்.