சென்னை: ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் சாஸ்த்ரா என்ற பெயரில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே மாணவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய தொழில்நுட்ப விழா இதுவாகும்.
சாஸ்த்ரா 2022 தொழில்நுட்ப விழாவில், 100 விழுக்காடு கழிப்பறைப் பயன்பாடு, சுகாதாரத்தைப் பேணுதல் என்னும் கருப்பொருள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
100 விழுக்காடு கழிப்பறைப் பயன்பாடு
மேலும் ஐஐடி மாணவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றனர். பொதுமக்களிடம் 100 விழுக்காடு கழிப்பறைப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ‘Nudge In Action’ என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து 700 பேர் பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு இம்மனம்பட்டி, ராஜகிரி கிராம மக்களிடம் கழிப்பறை வசதிகள் பயன்படுத்துவது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வடக்கு இம்மனம்பட்டி, ராஜகிரியில் சுகாதாரச் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஐஐடி மாணவர்கள் ஏற்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.