கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த மாதம் சென்னை ஐஐடி வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தத் தற்கொலை வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இந்த விசாரணையில், ஃபாத்திமா லத்தீப் அவருடைய அலைபேசியில் பதிவிட்டிருந்த தற்கொலைக் குறிப்புகள் உண்மையானவைதான் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கையளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப், டெல்லி சென்று பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தும் மகள் மரணம் தொடர்பாக மனு அளித்தார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தியை சந்தித்தபின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் லத்தீப், “என் மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் விசாரணைக்குப் பிறகு எழுந்துள்ளது. அவர் மரணம் அடைந்தவுடன் அங்கு வந்த கோட்டூர்புரம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள், ஏழு மாணவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால், அவர்களிடம் கோட்டூர்புரம் காவலர்கள் முறையாக விசாரணை நடத்தவில்லை.
ஃபாத்திமா இறந்த நாளன்று, அங்கு பிறந்தநாள் விழா நடந்திருக்கிறது. அதுதொடர்பாக விசாரிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தால் நாக்கும் கண்ணும் வெளியே வந்திருக்கும், ஆனால் அதுபோன்று எதுவும் இல்லை.