கேரள மாணவி ஃபாத்திமா கடந்த 8ஆம் தேதி இரவு ஐஐடி விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஐஐடியில் பணியாற்றும் பேராசிரியர்களே காரணம் என்று கூறப்பட்டுவரும் நிலையில், ஃபாத்திமாவின் மரணத்திற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும், இதுபோல் இன்னொருவர் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஐஐடி மாணவர்கள் ஹரிஹரன், அசாருதீன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று ஐஐடி மாணவர் சபை, நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் இருவரும் போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பேட்டியளித்த மாணவர்கள் கூறுகையில், 'ஐஐடியின் மாணவர் சபை மூலம் தங்களின் குறைகளைக் கேட்டறியவும், தீர்க்கவும் வெளிப்புறக் குழுவை உடனே அமைக்க நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், கல்வி சார்ந்த பிரச்னைகளைத் தவிர்த்து நிர்வாக துன்புறுத்தல்கள், பாகுபாடு போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க ஒவ்வொரு துறைகளிலும் குறை தீர்க்கும் வழிமுறைகளை அமைக்கவும் மாணவர் சபை கோரிக்கை விடுத்தது.