சென்னை: பி.எஸ்சி., புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, பி.எஸ்., டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் (BS in Data Science and Applications) நான்காண்டு பட்டப்படிப்பாக சென்னை ஐஐடி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக்கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணிப்பயிற்சியோ (Internship), ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். தனித்துவம் வாய்ந்த இப்பாடத்திட்டம் மாணவர்கள் சேர்வதற்கும், படிப்பை முடித்துச்செல்வதற்கும் ஏற்ற வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்பச்சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. கல்வி கற்போர் தாங்கள் விருப்பப்படி சேர்ந்து பயன்பெற ஏதுவாக நெகிழ்வுத்தன்மையுடன் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம்.
வயது வரம்பு இல்லை... ஆன்லைன் வகுப்புதான்:இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள், தாங்கள் 12ஆம் வகுப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தபின் இப்பாடத்திட்டத்தில் படிப்பைத் தொடங்கலாம். எந்த பாடப்பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்த எந்தவொரு மாணவரும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாணவர்கள், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப்பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரடியாகத்தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க:உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம்
'தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றது': இந்தப் பாடத்திட்டம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர், பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, "தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நன்கு வடிவமைக்கப்பட்ட பி.எஸ். டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் என்ற படிப்பை ஐஐடி, தரத்துடன் மாணவர்களுக்கு வழங்குகிறது. பிரபலமாகி வரும் பாடப்பிரிவுகளில் தரவு அறிவியலும் (Data Science) ஒன்று. திறமையான வளங்களுக்கான தேவைகள் அதிகரித்துக்காணப்படும் களத்தில் இது ஒரு வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம்.