கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது.
இந்த நிதியத்திற்கு, ஆரம்ப கட்டமாக 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியதன் அடிப்படையில், இந்த நிதியம் அனைத்து மாநிலங்களுக்கும் நிதியைப் பிரித்து ஒதுக்கி வருகிறது.
இந்நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாயில், வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, இந்த நிதியைப் பெற்று, 100 விழுக்காடு செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எவ்வளவு நிர்பயா நிதி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது, எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றங்கள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - ஜனநாயக மாதர் சங்கம்