சட்டவிரோதமாக குடிநீர் எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மாநிலம் முழுவதும் மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சீல் வைக்கப்பட்ட இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தலைமை வழக்கறிஞர், உரிமத்தை புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, தண்ணீர் அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும் எனவும், அதற்குக் கட்டணமாக 6,000 ரூபாய் வசூலிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், குடிநீர் ஆலைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே மூடப்பட்ட ஆலைகளால் குடிநீர் உற்பத்தி செய்து வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதே தவிர, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கவில்லை எனவும், ஆலைகள் மூடி இருக்கும்போது எப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியும் என்றும் கூறினார். பல்வேறு அமைப்புகளின் அனுமதியை பெற்று ஆலைகள் இயங்கி வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே இந்தக் குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.