தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மலைவாசஸ்தலங்களில் தொடரும் இ-பாஸ்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு - நீலகிரி

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் இ-பாஸ் நடைமுறை தொடர்வது குறித்து மத்திய அரசிடம் மூன்று நாள்களில் விளக்கம் பெற்று விரிவாக அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-high-court
chennai-high-court

By

Published : Oct 13, 2020, 4:07 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மெள்ள தளர்த்தப்பட்டுவருகிறது. மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் செல்ல மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ-பாஸ் ஏதும் தேவையில்லை என கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டுமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த எழில்நதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று (அக்.13) விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறைக்குப் பதிலாக, இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த ஆலோசித்துவருவதால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மலைப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் என்பதாலும், வெளியிலிருந்து செல்பவர்கள் மூலமாக மலைப்பகுதி மக்களுக்கு தொற்று பரவினால் ஆபத்தான சூழல் உருவாகும் என்பதாலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மலைப் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளைத் தொடர்வது குறித்து மத்திய அரசிடம் மூன்று நாள்களில் விளக்கம் பெற்று, விரிவான அறிக்கையளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : கட்டுப்பாட்டிற்கு வருகிறதா கரோனா; இரண்டு மாதங்களில் குறைவான பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details