சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம். நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விடுதி, சென்னை வடபழனி ஃபைவ் ஸ்டார் கிளப் ஆகியவை தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் விடுதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது எனக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கைவைத்திருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கிளப்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவற்கான சாதக, பாதகங்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு டிஜிபி தாக்கல்செய்த அறிக்கையில், கிளப்களில் சூதாட்டம் நடக்க வாய்ப்புள்ளதால், கழிப்பறைகள் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இது கிளப் உறுப்பினர்களின் தனிநபர் சுதந்திரத்தை, உரிமையைப் பாதிக்கும் செயல் என்று கிளப்களின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “தற்போது கிளப்களில் குடும்பத்தினருடன் வந்து நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் போக்கு உள்ளதால், அனைவரையும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பில் வைப்பது என்பது தவறானது. குற்றங்களைக் கண்டறிவது காவல் துறையினரின் முக்கியக் கடமை.
ஜனநாயக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும், சங்கங்களுக்கும் தனிநபர் உரிமை உள்ளது. தனிநபர் உரிமை என்ற பெயரில் குடிமகனோ, சங்கங்களோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
கிளப்களில் சூதாட்டம் நடக்கிறது என்பதை நம்புவதற்குப் போதிய காரணங்கள் இல்லாமல் காவல் துறையினர், நேரடியாக எந்தச் சோதனையையும் நடத்த முடியாது. இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையர் சோதனை உத்தரவைப் பிறப்பிக்கலாம்
கிளப்களுக்கு நுழையும் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அமைக்க வேண்டும். 30 நாள்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் கேட்கும்போது வழங்க வேண்டும்.
கிளப் வளாகத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மீறி சூதாட்டம் நடத்தப்படுவதைக் கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். உரிய உத்தரவுகள் இல்லாமல் எந்தக் காவலரும், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த முடியாது. தேவையில்லாமல் கிளப்களுக்குள் காவல் துறையினர் நுழைய கூடாது.
அதேபோல, விசாரணைக்குத் தேவைப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை மட்டுமே காவல் துறையினர் பெற வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களில் தலையிடக் கூடாது எனக் காவல் துறையினருக்கு உத்தரவிடப்படுகிறது” எனக் கூறி வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் யாசகம் கேட்கும் நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்