சென்னை:தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2017ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்துவருவதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் தமிழிசை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழிசை வழக்கு தொடர்ந்திருந்தார்.
முடிவுக்கு வந்த வழக்கு
இவ்வழக்கானது பலமுறை நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோதும், தமிழிசை சௌந்தரராஜன் தரப்பிலிருந்தும், தாடி கார்த்திகேயன் தரப்பிலிருந்தும் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு மீண்டும் இன்று (செப்.28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இவ்வழக்கு அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக தெரிவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ, அதன் தலைவர் தொல். திருமாவளவனிடமிருந்தோ, எந்த அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது என கூறி, வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்?