தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2021, 6:27 AM IST

ETV Bharat / city

திருமாவளவன் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிடத் தடை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிடத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:விசிக தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “2003ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் ஆகியோர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் எனக் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், தன்னைப் பற்றியும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி. ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை முழுமையாக விசாரிக்காமல், கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே என்னைப் பற்றிய அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் மான இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும், தனக்கு எதிரான உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பதிவுசெய்ய எட்டு எதிர்மனுதாரர்களுக்குத் தடைவிதிக்க வேண்டும், அவற்றை வெளியிட ஃபேஸ்புக், யூ-ட்யூப் தளங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துகளை எதிர்மனுதாரர்கள் வெளியிடத் தடைவிதித்ததுடன், வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: 'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகிறதா?'

ABOUT THE AUTHOR

...view details