சென்னை: காவல் துறை அலுவலர் பாஸ்கரன் என்பவர் 1,500 ரூபாய் கையூட்டு பெற்றதற்காக, இடைநீக்கம் செய்து காவல் துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்துசெய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தது.