நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல். ரவி தேர்தல் வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக உதயநிதி தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவைத் தேர்தல் அலுவலர் ஏற்றது தவறு எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களைத் தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது. உரிய நேரத்தில் வாதங்களைத் தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்தபோது, செலுத்த வேண்டிய வைப்புத்தொகையைச் செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கைத் தள்ளுபடிசெய்ய வேண்டுமெனவும், திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார்.
இன்று (பிப்ரவரி 25) இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், வைப்புத்தொகை செலுத்தாமல் தாக்கல்செய்யப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற அனுமதி மறுத்ததுடன், தேர்தலை எதிர்த்த இரு வழக்குகளையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க:துவரை சாகுபடி -விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை