தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹிஜாப், வேட்டிக்காகப் போராடுவது வேதனையளிக்கிறது - உயர் நீதிமன்றம் - கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு

நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காகப் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மத ரீதியாகப் பிளவுபட்டதா? எனக் கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Feb 10, 2022, 2:01 PM IST

சென்னை: திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல்செய்த பொது நல மனுவில், 1947ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1970ஆம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972ஆம் ஆண்டில் ரத்து செய்தபோதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசுக்கு உத்தரவிட கோரிக்கை

எந்தச் சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பரப் பலகைகளை நுழை வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், மரபு, மதம் சாராத நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது எனவும், கோயில் வளாகங்களில் வாகனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், கோயில்களில் உணவுப் பொருள்கள் விற்கத் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில் மரபுப்படி உடை அணிந்துவர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்துவருவதாகவும், வெளிநாட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

நீதிபதிகள் கேள்வி

பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காகப் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாகப் பிளவுபட்டதா எனக் கேள்வி எழுப்பினர்.

அனைத்துக் கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா எனவும், ஆகம விதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடைதான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்தக் கோயிலில் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

அநாகரிகமாக உடை அணிந்துவருவதாகப் புகார் உள்ளதா எனவும், ஆகம விதிகளில் வேட்டிதான் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா என நீதிபதிகள் கேட்டனர்.

ஆதாரம் இல்லை

இதற்குப் பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், அது சம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதைத் தாக்கல்செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்துசெய்ததாகவும், பல கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணியக் கூடாது என்ற ஆடைக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், நீதிமன்றம் எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றும், இந்து அல்லாதோர், கொடிமரத்தைத் தாண்டி கோயில்களுக்குள் நுழைய தடைவிதிக்கும் மரபு இன்னும் பல கோயில்களில் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்துவது போன்றது என்றும் கூறிய நீதிபதிகள், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: Hijab Row: ஹிஜாப் வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details