மெரினாவை அழகுபடுத்துதல், புதிய மீன் அங்காடி அமைத்தல், நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ” மெரினாவில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும். அவற்றை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்.
கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் புதிய மீன் அங்காடி மற்றும் மீனவர்கள் லூப் சாலையை கடக்காமல் கடற்கரையை அணுகுவதற்கு நடை மேம்பாலம் ஆகியவற்றை கட்டுவதற்கு, மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு, அவற்றிற்கு மாநகராட்சி பதிலளித்துள்ளது. அதனடிப்படையில் மத்திய அரசுதான் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் “ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது நடைபாதை வியாபாரிகள் தரப்பில், மெரினாவில் 1,200க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் ஈட்டிய நிலையில், 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்க உள்ளதாகவும், மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.