இந்தியாவில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. நடைமுறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் யார் வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். ஒருவரே வேறு ஒருவரின் வாக்கினையும் செலுத்த முடியும். இதனால் கள்ள ஓட்டு போடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அது மட்டுமின்றி ஒருவர் எந்த தொகுதியில் இருக்கிறாரோ அந்த தொகுதியில் அவரின் பெயர் உள்ள வாக்குச்சாவடியில் மட்டுமே ஓட்டு போட முடியும். இதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்களில் சிலர் பணி நிமித்தம் காரணமாக தங்களின் வாக்கினை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாகவும் கள்ளஓட்டை தடுக்கும் பொருட்டும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் விஷால், சுதர்சன், சுகில் ஆகிய மூவரும் இணைந்து கடந்தாண்டு இந்த இயந்திரத்தினை உருவாக்கினர். மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த இயந்திரத்தில் ஆதாருடன் கண் பதிவு, கைரேகையும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் வாக்காளரின் கண் ரேகையை ஸ்கேன் செய்து கைரேகையை பதிவிட்டவுடன் அவரின் ஆதாரில் உள்ள முகவரி திரையில் தோன்றும். மேலும் அந்த முகவரி எந்த தொகுதியில் உள்ளதோ அந்த தொகுதியின் வேட்பாளருக்கு இவர் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும்.
அதேபோல் ஒருமுறை வாக்களித்தவர், மறுமுறை வாக்களிக்க முயன்றால் அவரின் கண் ரேகை ஸ்கேன் செய்யும் போதே அந்த இயந்திரம் தானாக கள்ள ஓட்டு போட வந்துள்ளார் என்பதை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் குடியரசுத் தலைவர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம்! இந்த கண்டுபிடிப்பிற்காக குழந்தைகள் தினமான நாளை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளனர். குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். குடியரசுத் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் நேரடி வேலை வாய்ப்பு - நாஸ்காம் தகவல்!