சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நோய் பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 6 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.
26,500 மூன்றடுக்கு முகக் கவசங்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணிவதற்கான முழு உடல் கவசங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த வைரஸ் நோய் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை விரைவில் தாக்கும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள். ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான வைரஸ் தாக்கியுள்ளது என்பதை கண்டறிய முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிய சென்னை ’கிங்’ நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், பூனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி, அங்கு பரிசோதனை செய்த பின்னர்தான் நோய் தொற்று குறித்து உறுதி செய்ய முடியும்.