இது தொடர்பாக தென்மண்டல வானிலை மையத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், “ வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிகக் பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் 18 செ.மீ., கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் 14 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.