சென்னை: முன்னர் பெரும் மழை வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்ற மகிழ்வு இருக்கும் நிலை மாறி, பெரும் மழை பெய்தால் 2015 போல் ஆகிவிடுமா என்ற அச்சம் சென்னைவாசிகளைச் சுற்றிவருவதை மறுக்க முடியாது.
அண்மையில் 'நிவர்' புயலினால் பொழிந்த மழை, சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்படுத்தாவிட்டாலும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றமே பாராட்டுகள் தெரிவித்திருந்தாலும், நீர் மேலண்மையில் தமிழ்நாட்டின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2015ஆம் ஆண்டு பெய்த மழையினால் பல ஏரிகள் நிரம்பின. ஆனால் 2019ஆம் ஆண்டில் சென்னை வறட்சியின் உச்சத்தை அடைந்தது. இதற்குக் காரணம் சரியான நீர் மேலாண்மைத் திட்டம் தமிழ்நாட்டில் இல்லை என்பதே எனச் சொல்லப்படுகின்றது. அதேபோல் சரியான நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாத காரணத்தினாலே சென்னையில் வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றது என்ற கருத்துக்களும் நிலவுகிறது.
இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய நீரியல் ஆராய்ச்சி வல்லுநர் ஜனகராஜன் தெரிவிக்கையில், “நீர் மேலாண்மை குறித்து அதிக மழை பொழியும் போதும் அல்லது அதிக வறட்சியின் போதும் மட்டும் பேசுவது நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய சிக்கல். முதலில் நமக்கு எவ்வளவு மழை கிடைக்கின்றது. எவ்வளவு மழை சேமிக்கின்றோம் போன்றவை குறித்து தெளிவாக இருக்க வேண்டும்.
இதை நாம் சரியாகச் செய்யவில்லை. மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் என்ன ஆகின்றது, அதை எங்கு சேமித்துவைக்கின்றோம். இல்லை கடலுக்குச் சென்றதா போன்றவைகள் குறித்த தெளிவு இல்லை.