சென்னை: மாநகராட்சி துணை மேயராக பதவி ஏற்ற பிறகு ஸ்டாலின், உதயநிதி வரிசையில் சபரீசனுக்கு நன்றி தெரிவித்தார், 169ஆவது மாமன்ற உறுப்பினர், மகேஷ் குமார்.
சென்னையின் மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் துணைமேயருக்கான மறைமுகத் தேர்தல் நண்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.
மாமன்றக் கூட்டம் தொடங்கியவுடன் மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என நேரம் ஒதுக்கப்பட்டது.
போட்டியிடும் உறுப்பினரை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 200 உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், ஏற்கெனவே வாக்குச் சீட்டும், வாக்குப் பெட்டியும் தயார் நிலையில் இருந்தது.
மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் முறை
இந்த வாக்குச்சீட்டில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் எழுதப்படும். பெயர் எழுதி முடித்த பிறகு, அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்குச்சீட்டு அளிக்கப்படும். வாக்களிப்பதற்கு முன்பாக சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கையெழுத்துப் பெற வேண்டும். கையெழுத்து வாங்கிய உறுப்பினர்கள் வாக்கைப்பதிவு செய்து, சீட்டைப் பெட்டிக்குள் போடவேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, உடனடியாக வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற துணை மேயரை ஆணையர் இருக்கையில் அமர வைப்பார்கள்.
இந்தநிலையில் துணை மேயருக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.