தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிரிக்கெட் ஆடும் விநாயகர் சிலை - சென்னை ரசிகரின் 18 ஆண்டுகால வழிபாடு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடுவதைப்போன்ற விநாயகர் சிலைகளை வடிவமைத்து அண்ணா நகரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வழிபாடு செய்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagar

By

Published : Jul 8, 2019, 7:47 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. தேசிய விளையாட்டாக இல்லை என்றாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைத்து "கிரிக்கெட் ரசிகர்கள்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்குகிறது. இவர்கள் அனைவரும், இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவையும், அன்பையும் பல்வேறு பரிமாணங்களில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று நாடு முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் விருப்ப தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த, தீவிர கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பாளையத்தம்மன் கோயிலில் கிரிக்கெட் விநாயகரை வடிவமைத்து, கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு அர்ச்சனைகளும் செய்து வருகிறார். ஆம், அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் தான் இந்த கிரிக்கெட் ரசிகர். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார் இந்த ரசிகர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2001ஆம் ஆண்டு நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கோயில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த சமயத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அச்சமயத்தில் இந்தியா வெற்றி பெற்றால், புதிதாக கட்ட உள்ள கோயிலுக்கு கிரிக்கெட் விநாயகர் என்று பெயர் வைப்பதாக வேண்டினேன். இதனையடுத்து, அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ‘கிரிக்கெட் விநாயகர் கோயில்' என்று பெயர் வைத்தோம்.

கிரிக்கெட் விநாயகர் சிலை

மேலும் இந்திய அணியின் 11 வீரர்களையும் குறிக்கும் வகையில் 11 தலைகளுடன் ஒரு கையில் பேட், மற்றொரு கையில் பந்து உள்ளது போன்று ஒரு விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையுடன் பேட்ஸ்மேன் விநாயகர், பவுலிங் விநாயகர், கீப்பிங் விநாயகர், ஃபீல்டிங் விநாயகர் என மொத்தம் 6 விநாயகர் சிலைகளும் அமைக்கப்பட்டன. கிரிக்கெட் விநாயக்கருக்கு என்று சிறப்பு ஸ்லோகங்களும் இயற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா அணியின் வெற்றிக்கு காரணம் இந்த கிரிக்கெட் விநாயகர் தான் என்பது இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கிரிக்கெட் விநாயகர் கட்டாயம் உலகக்கோப்பையை பெற்றுத் தருவார் என்பதே அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details