சென்னை:திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், எம். இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திங்கள் முதல் ஆய்வு
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை குழு அமைத்து ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த 281 பள்ளிகளின் தரத்தை (சுற்று சுவர், கழிப்பறை, வகுப்பறை) 10 குழுவை கொண்டு ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒரு குழுவில் ஒரு உதவி கல்வி அலுவலர், ஒரு செயற்பொறியாளர், ஒரு தலைமையாசிரியர் மற்றும் அந்த அந்த பள்ளி ஆசிரியர்கள் இருப்பார்கள். மேலும் இந்த ஆய்வு, திங்கள் முதல் தொடங்கும் என உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்திளார்களிடையே பேசிய அவர், "மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திங்கள் முதல் ஆய்வு செய்ய உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அளித்துள்ள பட்டியல் படி அனைத்தும் ஆய்வு செய்யப்படும், உதவி கல்வி அலுவலர் தலைமையில் கொண்ட இந்த குழு அவர் அவர் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஒரு செயற்பொறியாளர், ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியரை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வு செய்த பிறகு ஆய்வறிக்கையை மாநகராட்சி துணை ஆணையரிடம் (கல்வி) சமர்ப்பிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தனிப்படைகள் 6 ஆக அதிகரிப்பு; ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் விடுவிப்பு