சென்னை:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் 119 தொடக்கப்பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என 281 பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு கரோனா தாக்கத்தால் தனியார் பள்ளியில் பயின்ற பல்வேறு வகுப்பு மாணவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் மாநகராட்சி சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப்பள்ளிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இருக்கும் மாணவர்களை தக்க வைக்கவும் மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என துணை ஆணையர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு பள்ளியை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு ( தெருத்தெருவாக) தலைமையாசிரியர் தலைமையில் சென்று, மாநகராட்சிப் பள்ளியில் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள் துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை படிவத்தை பள்ளி மூடிய பிறகும் வெளியே இருக்கும் பாதுகாவலரிடம் கொடுத்துச்செல்லும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.
இடைநிற்றல் மாணவர்கள் எவ்வாறு கண்டறியப்படுவர், மீண்டும் பள்ளிக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?
நீண்ட நாட்களாகப்பள்ளிக்கு வராத மாணவர்களை அவர்கள் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்து, என்ன வகையான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என கேட்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் அந்தந்த தலைமையாசிரியர்கள் ஈடுபடுவார்கள். தற்போது பள்ளி தொடங்கிவிட்டது. இனி வருங்காலங்களில் இடைநிற்றலைத் தவிப்பதற்கு தொடர்ந்து ஒரு மாணவர் 6 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால், அவர்களின் பெற்றோருக்குத்தொடர்புகொண்டு என்னவென்று முழுமையாக விசாரிக்கப்படும்.