சென்னை: இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புற கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அல்லது நிறுவனங்களின் சார்பில் திட்டத்திற்கான மதிப்பீட்டில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நிதி செலுத்தப்பட வேண்டும். மேலும், நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும்.