ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரை நேரில் அணுகுவதையோ அல்லது மருத்துவமனைக்கு நேரில் செல்வதையோ தவிர்க்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி, தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க 'GCC Vidmed' என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
இச்செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவரிடம் காணொலி மூலம் 24 மணி நேரமும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில், கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய வேண்டி இருப்பின் உடனடியாக குறுஞ்செய்தி தொலைபேசி அழைப்பு மையத்துக்கு அனுப்பப்படும்.