தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் உருவாகும் மியாவாக்கி அடர்வனங்கள்!

சென்னை: கான்கிரீட் காடாகிப்போன சென்னையை பசுங்காடாக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதற்காக பல இடங்களிலும் மியாவாக்கி முறை அடர்வனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்த ஒரு சிறப்பு செய்தித்தொகுப்பு...

forest
forest

By

Published : Dec 22, 2020, 4:03 PM IST

அகிரா மியாவாக்கி. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான மியாவாக்கி, சிறிய இடங்களில் அதிக செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து அடர்வன உருவாக்கத்தில் புதுமையை புகுத்தியவர். பல கோடி மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியுள்ள இவரின் முயற்சியை பின்பற்றும் வகையில், அடர்வன உருவாக்க முறைக்கு அவரின் பெயரையே வைத்து விட்டனர். உலகம் முழுக்க மியாவாக்கி முறை காடு வளர்ப்பு இன்று பெருகி வருகிறது.

அதன்படி, தலைநகர் சென்னையில் உள்ள காலி இடங்கள், நீர்நிலை ஓரங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் என பயன்படுத்தப்படாத இடங்களை அறிந்து, அதில் மியாவாக்கி அடர்வனங்களை அமைத்து வருகிறது மாநகராட்சி. அடையாறு மண்டலத்தில் இம்முறையில் செடிகள் நடப்பட்டு நல்ல பலனை தந்ததால், தொடர்ந்து வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் போன்ற இடங்களிலும், பல்வேறு மரச்செடிகள் நடப்பட்டுள்ளன. தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மியாவாக்கி அடர்வனங்களை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

மியாவாக்கி அடர்வன உருவாக்கப்பணிகளில் தன்னார்வலர்கள்...

ஒரு நகரம் பசுமையாக இருக்க 33% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், நம் சென்னை 25 விழுக்காட்டையாவது எட்ட, அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாக கூறுகிறார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். மியாவாக்கி முறை அடர்வனத்தால் வெப்பத்தை ஒரளவு கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு தூய்மையான காற்றையும், சுகாதாரமான சூழலையும் தர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மியாவாக்கி முறையில் 1,000 சதுரடியில் 300 மரங்கள் வரை வளர்க்க முடியும். சாதாரணமாக ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் 8 முதல் 10 அடி வரை இடைவெளி இருக்கும். ஆனால், இந்த முறையில் 2 முதல் 3 அடி மட்டுமே போதுமானது. ஒரே இனச் செடிகளை அருகருகே நடாமல், வெவ்வேறு இன மரச்செடிகளை அடுத்தடுத்து நடுவதால், செடிகள் ஒன்றுக்கு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு வளரும். இதனால் 100 ஆண்டுகளில் வளரவேண்டிய மரச்செடிகள், 20 ஆண்டுகளிலேயே வளர்ந்து விடுவதாக கூறுகிறார் ’துவக்கம்’ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார்.

சென்னையில் உருவாகும் மியாவாக்கி அடர்வனங்கள்!

மியாவாக்கி அடர்வனம் தற்போது காலத்தின் கட்டாயமாகி வருகிறது. அதோடு பலத்தரப்பட்டவர்களையும் சூழல் குறித்து சிந்திக்கவும் வைத்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ராகுல், வார இறுதி நாட்களில் மியாவாக்கி முறை அடர்வன உருவாக்கத்தில் தன்னையும் ஈடுபடுத்தி வருகிறார். அடுத்த தலைமுறைக்கு சுத்தமான காற்றையும், சூழலையும் உருவாக்க தன்னால் முடிந்ததை செய்து வருவதாக கூறும் அவர், இச்செயல் மனதுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இப்போது சிட்டுக்குருவிகள், பட்டாம்பூச்சிகளை சென்னையில் பார்த்திருப்போர் ஒருசிலரே. காரணம் போதுமான மரங்களின்றி, கான்கிரீட் காடாக உருமாறியுள்ளதுதான். எனவே, சென்னையை பசுங்காடாக மாற்றும் இந்த சிறிய முயற்சியான மியாவாக்கி அடர்வன உருவாக்கத்திற்கு நம்மாளான பங்களிப்பும் இன்றியமையாதது. ஏனெனில் இயற்கை நமக்கானது.

இதையும் படிங்க:முயற்சியின் முழு உருவம் கிரன் ராஜ்புத்!

ABOUT THE AUTHOR

...view details