சென்னை:கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து முதன்முறையாக ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரும் நபர்களை, சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கரேனா பாதுகாப்பு மையத்தில் (COVID CARE CENTRE) கொண்டு தங்க வைக்கவும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இது சம்பந்தமாகப் புகார்கள் இருப்பின், சென்னை மாநகராட்சிக்கு 044-2534520 தொலைபேசி வாயிலாகப் புகாராக தெரிவிக்கும்படி மே18ஆம் தேதி அன்று கூறப்பட்டது.
அதில் இதுவரை 12 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அந்தப் புகார்கள் மீது வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 புகார்களில் விதிமீறல் இல்லை எனவும், ஒரு நோயாளி உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 5 நபர்களிடமிருந்து தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனிவரும் நாட்களில் வெளியே வரக்கூடாது என்றும், மீறினால் கரோனா பாதுகாப்பு மையத்திற்கு (COVID CARE CENTRE) அழைத்துச் செல்லப்படுவர் என சென்னை மாநகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: புதிதாக குணமடைந்து வீடு திரும்பிய 25 ஆயிரத்து 368 பேர்