தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் மட்டும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 85,859ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று காட்டுத்தீ போல் மாநகரில் பரவுவதற்கு சந்தைகள், குடிசைப் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. மே மாத தொடக்கத்தில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து மட்டுமே கிட்டத்தட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரவியதால், அங்கிருந்த சந்தை திருமழிசை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வட சென்னை பகுதியில் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, கொத்தவால்சாவடி சந்தை மூடப்பட்டது. இதேபோல், மயிலாப்பூர் சந்தை உள்பட நகரின் முக்கியச் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
இதற்குப் பின்னரும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று கடும் வேகத்துடன் பரவி வந்தது. இதற்கு முக்கியக் காரணம் மக்கள் நெருக்கம்தான் என்கிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள். இதனைத் தொடர்ந்தே ஜூலை மாத ஆரம்பத்தில் மைக்ரோ நோய் தொற்று கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்தது சென்னை மாநகராட்சி. அதனடிப்படையில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அதிகப்படியான ’ஃபீவர் கேம்ப்ஸ்’ என்ற காய்ச்சல் கண்டரியும் மையங்கள் அதிகளவில் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக வட சென்னை பகுதியில் கரோனா பரவும் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டதுடன், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளும் சீல் வைக்கப்பட்டன. மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து எடுத்த இந்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது என்றே கூறலாம். இருப்பினும், சென்னை நகரில் தற்போதும் கரோனாவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.